காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைப் பூர்த்தி செய்கிறது.
வடமராட்டசி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறியும் அமைப்பால், கடந்த வருடம் மார்ச் மாதம் 15ஆம் திகதி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தை பூர்த்தி செய்கின்ற நிலையில், இதனை முன்னிட்டு இன்று கண்டனப் பேரணியையும் கவனயீர்ப்பு போராட்டத்தினையும் முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, திருகோணமலை, வவுனியா போன்ற இடங்களிலும் காணாமல் போனோரது உறவினர்கள் நீண்டகாலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களுக்கு தீர்வு வழங்கப்படும் என்று பல்வேறு தரப்பினரால் உறுதியளிக்கப்பட்டுள்ள போதும், இன்னும் காணாமல் போன தங்களது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை என்று அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, காணாமல் போனோரை தேடி அறிதல் உள்ளிட்ட நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டுள்ள காணாமல் போனோர் அலுவலகம், தமது இலக்கினை அடைவதற்கு மக்களின் ஒத்துழைப்பை கோரி இருக்கிறது. கடந்த தினம் குறித்த அலுவலகத்தின் தலைவரால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.
காணாமல் போனோரை கண்டறிதலும், அவர்களுக்கு நிகழ்ந்தது என்ன என்பதை அடையாளம் காணுதலும், நிவாரணம் வழங்குவதற்கான வழிமுறைகளை அடையாளம் காணுதல், மீள அவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் உள்ளிட்ட நோக்கங்களுக்காக இந்த அலுவலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த நோக்கங்களை அடைவதற்கு, காணாமல் போனோரின் உறவினர்கள் பலத்தையும் ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என்று அவர் கோரி இருந்தார். எவ்வாறாயினும், காணாமல் போனோர் அலுவலகத்தினால் தங்களுக்கு தீர்வை வழங்க முடியும் என்று நம்பவில்லை என்று காணாமல் போனோரது உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.