ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை இன்டர்போல் ஊடாக கைதுசெய்யும் பகிரங்க பிடியாணையை கொழும்பு கோட்டை நீதவான் பிறப்பித்துள்ளார்.

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரின் விளக்கங்களை கருத்திற் கொண்ட நீதவான் லங்கா ஜயரத்ன, உதயங்க வீரதுங்கவை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாருக்கு ஆங்கில மொழி மூலம் பகிரங்க கைது ஆணை உத்தரவை பிறப்பித்துள்ளார். கடந்த பெப்ரவரி 04ம் திகதி உதயங்க வீரதுங்க டுபாய் விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அங்கு அவரின் கடவுச்சீட்டு, வதிவிடம் மற்றும் தொடர்பு இலக்கங்கள் உள்ளிட்ட தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்ட பின் அவர் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் அந்நாட்டு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக தேடுதலில், உதயங்க வீரதுங்க வழங்கிய வதிவிட முகவரி மற்றும் தொலைபேசி இலக்கங்கள் என்பன போலியானவை என்றும் தொலைபேசி இலக்கள் செயலிழந்துள்ளதென்றும் தெரியவந்துள்ளது. அதன்படி உதயங்க வீரதுங்க தப்பிச் சென்று தலைமறைவாகி இருக்கும் சந்தேகநபராக பெயரிடப்பட்டு அந்நாட்டு அதிகாரிகளால் இலங்கை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நீதிமன்றில் மேலும் தெரிவித்துள்ளனர்.