யாழ்ப்பாணத்தில் இலஞ்சம் கொடுக்க மறுத்ததால் பொதுமகன் ஒருவது மோட்டார் சைக்கிளை பொலிஸார் பறித்து சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவமானது இன்று முற்பகல் யாழ்ப்பாணம் முட்டாஸ்கடை சந்தியில் இடம்பெற்றுள்ளது. இளம் தம்பதியினர் தமது சிறு பிள்ளையுடன் யாழ்.வைத்தியசாலை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர்களை போக்குவரத்து பொலிஸார் மறித்து வாகன அனுமதிப்பத்திரம் மற்றும் காப்புறுதிப்பத்திரம் ஆகியவற்றை சோதனையிட்டுள்ளனர். இச் சந்தர்ப்பத்தில் குறித்த நபர் வாகனத்தின் அனுமதிப் பத்திரம், காப்புறுதி ஆகியவற்றையும் காட்டியதுடன் வாகனம் செலுத்துவதற்கான அனுமதிப் பத்திரமானது பிறிதொரு போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் இருப்பதாக கூறி அதற்காக பொலிஸாரால் வழங்கப்பட்ட பற்றுச்சீட்டை காண்பித்துள்ளார்.

இதன்போது பொலிஸார் குறித்த நபரின் பணப்பையில் இருந்த பணத்தை கண்டதும் குறித்த பற்றுச் சீட்டு செல்லுபடியற்றது என குறிப்பிட்டு தமக்கு இலஞ்சம் தருமாறு கோரியுள்ளனர். இதன்போது அந்நபர் அப் பணமானது தனது பிள்ளையின் மருத்துவ செலவுக்கு தேவையான பணம் எனவும் எனவே தரமுடியாது என கூறியுள்ளார்.

இதனையடுத்து பொலிஸார் அவரது மோட்டார் சைக்கிளை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்போவதாக கூறி அங்கிருந்த வாகனமொன்றை அழைத்துள்ளனர். அதற்கு அந்நபர் தனது மோட்டார் சைக்கிளை வேறொரு வாகனத்தில் ஏற்றினால் பிரச்சினை ஏற்படும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதனால் அச் சந்தியில் அதிகளவான பொதுமக்கள் கூடிவிட்டனர்.

இதனையடுத்து அங்கிருந்த போக்குவரத்து பொலிஸார் தமது பொலிஸ் நிலைய வாகனத்தை வரவழைத்து அதில் அம் மோட்டார் சைக்கிளை ஏற்றிச் சென்றுள்ளனர்.