ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றதிகாரி மற்றும் பணிப்பாளர் சபையின் செயற்பாடுகள் தொடர்பில் நம்பிக்கையில்லை என ஸ்ரீலங்கன் விமான நிறுவன விமானிகள் சங்கம் கடிதமொன்றின் ஊடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளது.
இலங்கை விமானிகள் சங்கம், இலங்கை சுதந்திர ஊழியர் சங்கம், விமான உதவியாளர்கள் சங்கம் மற்றும் இலங்கை விமான சேவை நிறைவேற்று சங்கம் ஆகியன இணைந்து ஜனாதிபதிக்கு இந்த கடிதத்தை அனுப்பியுள்ளன. ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் ஊழல் தொடர்பில் ஆராய்வதற்கு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட, ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பில் இந்த கடிதத்தின் ஊடாக ஸ்ரீலங்கன் விமான நிறுவன விமானிகள் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட மூன்று சிறிய விமானங்களுக்கு, அவை பாதுகாப்பான விமானப் பயணத்திற்கு தகுதியானது என்பதை உறுதிப்படுத்தும் எடொப்ஸ் சான்றிதழ் பெறப்படவில்லை என ஸ்ரீலங்கன் விமான நிறுவன விமானிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
எடொப்ஸ் சான்றிதழ் இன்மையால் குறித்த விமானங்களை சேவையில் ஈடுபடுத்த முடியாதுள்ளதுடன், அதிகபட்ச செயற்றிறனுடன் விமானங்களை சேவையில் ஈடுபடுத்தி வருமானத்தை ஈட்டுவதற்கான இயலுமை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ள ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் விமானங்கள் எவ்வித பயன்பாடுமின்றி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமை, இந்த நிறுவனத்தின் நட்டத்திற்கான மற்றுமொரு காரணி என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நிறுவனத்தின் வியூகம் அல்லது பயணங்கள் தொடர்பில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துவதற்கு தற்போதைய பிரதம நிறைவேற்று அதிகாரிக்கோ பணிப்பாளர் சபைக்கோ எவ்வித அனுமதியும் வழங்க வேண்டாம் என விமானிகளின் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் மீள் வியூகம் தொடர்பில் ஆலோசனை வழங்கும் நிறுவனமான நைராஸ் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் எவ்வித நம்பிக்கையும் இல்லை என இலங்கை விமானிகள் சங்கம் கடிதத்தின் ஊடாக ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.