சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மன்னார் மாவட்ட மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று காலை சர்வதேச பெண்கள் தின விழிர்ப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட வளர் பிரை பெண்கள் திட்ட பொறுப்பதிகாரி ரி.மேரி பிரியங்கா தலைமையில் மன்னார் பொது வைத்தியசாலைக்கு முன் ஆரம்பமான குறித்த ஊர்வலம் பிரதான வீதியூடாக சென்று மன்னார் பனங்கட்டுக்கொட்டு சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தை சென்றடைந்தது. குறித்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட பெண்கள் பல்வேறு பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர். குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பெண்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டிருந்தனர்.
ஊர்வலத்தை தொடர்ந்து மன்னார் பனங்கட்டுக்கொட்டு சிகையலங்கரிப்பாளர் கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் நிகழ்வு இடம் பெற்றது. குறித்த நிகழ்வில் விருந்தினர்களாக மன்னார் நகர உதவி பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு, தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் பெண்கள் திட்ட இணைப்பாளர் திருமதி லவினா, வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் அன்றனி ஜேசுதாசன், மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் பெனடிற் குரூஸ் மற்றும் மாதர் கிராம அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.