இறுதி யுத்தத்தின்போது, சரணடைந்து காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ், அவருடன் சரணடைந்து காணாமலாக்கப்பட்ட பொதுமக்கள் தொடர்பான தகவல்களை அறியத்தருமாறு கோரி, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரிக்கு அண்மையாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, புனித யாழ்.பத்திரிசியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைப்பதுக்காக பாடசாலைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும்பொருட்டு போராட்டம் இடம்பெற்று வருகின்றது. காணாமலாக்கப்பட்ட அருட்தந்தை பிரான்சிஸ், புனித யாழ். பத்திரிசியார் கல்லூரியின் முன்னாள் அதிபராவார்.

இந்நிலையில் புனித பத்திரிசிரியார் கல்லூரியின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட காணாமல் போனோரின் உறவினர்களில் மூவரை அழைத்து ஜனாதிபதி கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். இதன்படி ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள தரப்பினரின் சார்பாக அருட் தந்தை சக்திவேல் உள்ளிட்ட மூவருடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.