மட்டக்களப்பு -வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள குறிஞ்சாமுனையில் கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் சடலங்கள் இன்று அவர்களது வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவுப் பொலிஸார் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததின் பேரில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் குறிஞ்சாமுனையைச் சேர்ந்த 29 வயதான நீலவண்ணன் லோகநாயகி மற்றும் 36 வயதான கந்தசாமி வேதநாயகம் ஆகியோரை சடலங்களை மீட்டுள்ளனர். ஏற்கெனவே திருமணமான இவர்கள் இருவரும் இரண்டாந்தாரமாக ஒருவரையொருவர் திருமணம் செய்திருந்ததாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. நீலவண்ணன் லோகநாயகிக்கு முதல் திருமணத்தின் மூலம் ஒரு குழந்தையும் இரண்டாம் திருமணத்தின் மூலம் 5 மாதக் கைக்குழந்தையும் உள்ளதாக உறவினர்கள் பொலிஸ் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். சடலங்கள் மீட்கப்பட்ட இடத்திலிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படும் சில தடயப் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

சட்ட வைத்திய அதிகாரியின் உடற்கூறாய்வுக்காக சடலங்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி கணவர் மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.