உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், நேற்று ஜப்பானுக்குச் சென்றதை அடுத்து, கல்வி இராஜாங்க அமைச்சராக இருந்த வேலுசாமி இராதாகிருஷ்ணன், கல்வி அமைச்சராக தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் நாடு திரும்பும் வரை, கல்வி அமைச்சராக வேலுசாமி இராதாகிருஷ்ணன் செயற்படுவாரென, கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் ஒருவர், கல்வி அமைச்சராகச் செயற்படுவது, இதுவே முதற்றடவையாகும். கடந்த காலங்களில், கல்வி அமைச்சர் நாட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில், அவருடைய பொறுப்புகளை, கல்வி அமைச்சின் செயலாளர் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதே வழமையாக இருந்தது.

இருப்பினும் இம்முறை, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், தான் நாட்டில் இல்லாத சமயம், அதன் பொறுப்புகளை கல்வி இராஜாங்க அமைச்சர் ஏற்றுச் செயற்படுவாரெனவும், இது, நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடாக அமைந்துள்ளதெனவும் தெரிவித்திருந்தார்.