தமிழக மீனவர்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்த முடியாது என்று இந்திய மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை போன்ற மனித உரிமை மீறல்களை இலங்கை மேற்கொள்வதாகவும், இந்தவிடயத்தை இந்திய அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து, அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று மதுரை மேல்நீதிமன்றக் கிளை அமர்வில் மனுத்தாக்கல் செய்திருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நேற்று இடம்பெற்றது. இதன்போது, இந்திய அரசாங்கத்தின் சார்பில், உதவி மன்றாடியார் நாயகம் ஜீ.கார்த்திகேயனினால் எதிர்மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதில், இலங்கையும் இந்தியாவும் பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கின்ற நாடுகள் என்ற அடிப்படையில், ஒரு நாட்டை அதன் இணக்கப்பாடு இல்லாமல் இன்னொரு நாட்டினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான இணக்கப்பாடுகள் எதுவும் இதற்கு முன்னர் 1974 அல்லது 1976 போன்ற ஆண்டுகளில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் எட்டப்படவில்லை.

எதிர்காலத்திலும் அவ்வாறான இணக்கப்பாடு எதனையும் எட்டுவதற்கான வாய்ப்புகளும் இல்லை என்ற குறித்த எதிர்ப்பு மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மனு மீதான மேலதிக விசாரணைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.