கொழும்பு மாநகர சபையின் பிரச்சினைகளை தீர்த்து பலமான கொழும்பை நாம் உருவாக்குவோம் என கொழும்பு மாநகரசபையின் முதல் பெண் மேயர் ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பு மாநகர சபையின் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,கொழும்பு மாநகர சபை என்பது தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்களம் ஆகிய மூவின மக்களும் மிகவும் ஒற்றுமையாகவும் ஐக்கியமாகவும் வாழும் நகரமாகும். ஆகவே தேசிய ஐக்கியத்தை கட்டியெழுப்பி மூவின மக்களின் ஒத்துழைப்புடன் கொழும்பு மாநகரத்தை அபிவிருத்தி செய்வோம். அத்துடன் நேர்மை மற்றும் செய்திறன் கூடிய மாநகர சபையாக கொழும்பு மாநகர சபையாக மாற்றியமைப்போம்.
முன்னைய ஆட்சி காலத்தின்போது கொழும்பு மாநகர சபையின் ஆட்சி எம்மிடம் இருந்தாலும் மத்திய ஆட்சி எம்மிடம் இருக்கவில்லை. தற்போது எமக்கு ஆட்சி உள்ளது. ஆகவே கொழும்பு மாநகர சபையின் பிரச்சினைகளை தீர்த்து பலமான கொழும்பை நாம் உருவாக்குவோம் என மேலும் தெரிவித்தார்.
இதன்படி கொழும்பு மாநகர மேயராக ரோசி சேனாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளதுடன், உதவி மேயராக மொஹமட் துல்பா மொஹமட் இக்பால் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.