26 பாதுகாப்பு படையினரை கொலை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் 3 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இருந்து வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் பெற்றுக்கொடுத்த உத்தரவொன்றிற்கு அமைய குறித்த வழக்கு இவ்வாறு மாற்றப்பட்டுள்ளது. முதலில் வவுனியா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட குறித்த வழக்கு சட்டமா அதிபரின் கோரிக்கைக்கு அமைய அனுராதபுரம் மேல் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், இந்த தீர்மானத்திற்கு எதிராக, விடுதலைப்புலி உறுப்பினர்கள் மூவரும் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுதாக்கல் செய்திருந்தனர். அதன் தீர்ப்பிற்கு அமையவே வவுனியா மேல் நீதிமன்றத்திற்கு குறித்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டு 18 கடற்படை வீரர்கள் மற்றும் 8 இராணுவ வீரர்கள் வவுனியாவில் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த வழக்கு சட்டமா அதிபரால் தொடரப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.