காணாமல் போனோர் அலுவலகம்மீது, புலம்பெயர்ந்த அமைப்புகளால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் குறித்த அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். குறித்த அலுவலகம் புலிகளின் சார்பில் இயங்கவிருப்பதாகவும், வடக்கு கிழக்குக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், பூகோள இலங்கையர்கள் பேரவை என்ற புலம்பெயர்ந்த அமைப்பு குற்றம் சுமத்தி இருந்தது. ஆனால் அது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு என்றும், இந்த அலுவலகமானது ஒரு இனத்துக்கோ, பிரதேசத்துக்கோ, ஒரு காலப்பகுதிக்கோ வரையறுக்கப்பட்டது இல்லை என, சாலிய பீரிஷ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அலுவலகத்தின் செயற்பாடு, வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் காணாமல் போனவர்கள் மாத்திரம் இன்றி, நாட்டின் எந்த பகுதியிலும் அரசியல் உள்ளிட்ட எந்த காரணத்துக்காகவேனும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்தும் அமையவுள்ளது. அதன் சட்டதிட்டங்கள் குறித்த உரிய தெளிவில்லாமல் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்று அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.