இலங்கையில் இன்னமும் நில அபகரிப்புகள் தொடருமாயின், நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியாது என, ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது அமர்வு, ஜெனீவாவில் நேற்றும் தொடர்ந்தது. மனித உரிமைகளுக்கான ஐ.நா உயர்ஸ்தானிகர் ஷெய்ட் ராட் அல்-ஹ_ஸைனின் அறிக்கையை, மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் பிரதி உயர்ஸ்தானிகர் கேற் கில்மோர் சமர்ப்பித்தார். ஐ.நாவுடனான தொடர்ச்சியான ஒத்துழைப்பை, இலங்கை வழங்கி வருகிறது எனவும், அதற்கான வரவேற்பை வழங்குவதாகவும், கில்மோர் குறிப்பிட்டார். ஆனால், அதன் பின்னரான அவரது அறிக்கை, இலங்கை மீதான விமர்சனங்களையே முழுமையாக வழங்கியது.நிலைபேறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதில், இலங்கையால் மிகக்குறைந்த அளவிலான முன்னேற்றமே பெறப்பட்டுள்ளது என்பது தொடர்பாகக் கவலையடைவதாகத் தெரிவித்த அவர், 30ஃ1 தீர்மானத்தின் கீழ், நிலைபேறுகால நீதிப் பொறிமுறைக்காக இலங்கை வழங்கிய அர்ப்பணிப்பு, குறிப்பிடத்தக்க முடிவுகளோ அல்லது பொது வெளியில் கிடைக்கும் சட்டமூல வரைவுகளோ இல்லாத நிலையில், சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று குறிப்பிட்டார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இரு நாட்களுக்கு முன்னர் இலங்கை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்துக்காக, ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டமை, இலங்கையால் பெறப்பட்ட அடைவாகக் காட்டப்பட்டிருந்தது. எனினும், உயர்ஸ்தானிகரின் அறிக்கையில், அந்த ஆணையாளர்கள், மிக அண்மையிலேயே நியமிக்கப்பட்டனர் என்ற விடயம் சுட்டிக்காட்டப்பட்டது. அது குறித்த சட்டம் இயற்றப்பட்டு, 20 மாதங்கள் ஆகிவிட்டன என்பதுவும், அங்கு குறிப்பிடப்பட்டது.
இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை மீளக் கைப்பற்றுவதில், குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் காணப்படவில்லை எனத் தெரிவித்த பிரதி உயர்ஸ்தானிகர் கில்மோர், “காணிகளை அபகரிப்பது தொடர்ந்தாலோ அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளுக்கான நியாயமான இழப்பீட்டை வழங்குவதற்கான சுயாதீனமான பொறிமுறை இல்லாத நிலைமையிலோ, நம்பிக்கை என்பது மீளக் கட்டியெழுப்பப்பட மாட்டாது” என்று விமர்சித்தார்.
சர்வதேச மனித உரிமைகளுக்கான சட்டமும் சர்வதேச மனிதாபிமானச் சட்டமும், மோசமான அளவில் மீறப்பட்டுள்ளது எனவும், அவற்றுக்காகக் காணப்படும் சட்டவிலக்கீட்டை எதிர்கொள்வதற்கான விருப்பத்தையோ அல்லது திறனையோ, அதிகாரிகள் இன்னமும் வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவித்த அவர், பாரிய குற்றங்களை விசாரிப்பதற்காக, சர்வதேசப் பங்களிப்புடனான விசேடமான நீதிமன்றமொன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற வாதத்துக்கு, இந்நிலைமை வலுச் சேர்க்கிறது என்றும் குறிப்பிட்டார். இவ்வாறான பொறிமுறை இல்லாத நிலையில், பூகோள ரீதியிலான நீதித்துறைப் பயன்படுத்துமாறு, உறுப்பு நாடுகளிடம் கோருவதாகவும் தெரிவித்தார்.
சமூகங்களுக்கு இடையில், கடந்தாண்டு இடம்பெற்ற வன்முறைகள், சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், வெறுப்புப் பேச்சு ஆகியன பற்றி, ஆழ்ந்த கவனத்தைக் கொண்டிருப்பதாகத் தெரிவித்த அவர், கண்டி மாவட்டத்தில், முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகளையும் பற்றிக் குறிப்பிட்டார்.
அதேபோல், சித்திரவதைகள் இன்னமும் தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றன எனக் கிடைக்கும் அறிக்கைகள் தொடர்பாகவும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான துன்புறுத்தல்களும் கண்காணிப்பும் இன்னமும் தொடர்கின்றன என்பது தொடர்பாகவும் கிடைக்கும் அறிக்கைகள், இன்னமும் அதிக கவனத்தை ஏற்படுத்துகின்றன அவர் குறிப்பிட்டார். எனவே, இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக, அதிக கவனத்தைத் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டுமென, அவர் மேலும் கோரினார்.