யாழ் மணியந்தோட்டம் பகுதியில் இளைஞரொருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கடந்த 5 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இருவருக்கும் நிபந்தனையுடனான பிணை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று இந்த அனுமதியை வழங்கியுள்ளது. 2017 ஒக்ரோபர் 22ம் திகதி அரியாலை கிழக்கு மணியம்தோட்டம் வசந்தபுரம் முதலாம் குறுக்கு வீதியில் 24 வயதான ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் பலியானார். இது தொடர்பான விசாரணைகள் யாழ்ப்பாண தலைமையக காவற்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு பின்னர், காவற்துறை மா அதிபரின் பணிப்பின் பேரில் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவிற்கு பாரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் யாழ் விசேட அதிரடிப் படை முகாமில் கடமையாற்றிய இருவரை கைது செய்தனர். சந்தேகநபர்கள் சுமார் 5 மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் தரப்பில் யாழ் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிய மனுவின் அடிப்படையில், அவர்கள் இருவரும் இன்று தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், 5 லட்சம் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல அனுமதியளிக்கப்பட்டது.

அத்துடன், சந்தேகநபர்கள் இருவரும் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும், கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் கையொப்பமிடவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் வெளிநாடுகளுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.