யாழ். சங்கானையில் ஆலயக் குருக்களைத் துப்பாக்கிச் சூடு நடாத்தி கொலை செய்து அவரது பிள்ளைகளைக் காயப்படுத்திவிட்டு ஒன்றரை லட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றைக் கொள்ளையடித்துச் சென்ற குற்றத்துக்கு இராணுவச் சிப்பாய் உள்ளிட்ட மூவருக்கு மரணதண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்று இன்று தீர்ப்பளித்துள்ளது. தானியங்கித் துப்பாக்கியைப் பயன்படுத்தியமைக்கு எதிரிகள் மூவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது.

குருக்கள் மற்றும் அவரது பிள்ளைகளை சுட்டு படுகாயப்படுத்தியமைக்கு மூன்று எதிரிகளுக்கும் தலா 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கப்படுகிறது” என்று மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தண்டணைத் தீர்ப்பை வழங்கினார். கடந்த 2010 ஆம் ஆண்டு சங்கானை, முருகமூர்த்தி வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பவற்றை கொள்ளையிடப்பட்ட சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் சிவானந்தக் குருக்கள் நித்தியானந்தக் குருக்கள் கொல்லப்பட்டார். அவரது மகன்கள் இருவரும் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கில் இராணுவப் புலனாய்வாளர்களான, காசிநாதன் முகுந்தன், பாலசுப்பிரமணிம் சிவரூபன் ஆகியோரும் இராணுவச் சிப்பாயான பேதுறு குணசேனவும் எதிரிகளாகக் கைது செய்யப்பட்டனர். மல்லாகம் நீதவான் நீதிமன்றில் சுருக்கமுறையற்ற விசாரணைகள் இடம்பெற்று வழக்கேடுகள் சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டன. சந்தேகநபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்தமை, துப்பாக்கியைப் பயன்படுத்தியமை, குருக்களைக் கொலை செய்தமை மற்றும் மூவரை படுகாயப்படுத்தியமை ஆகிய 4 குற்றச்சாட்டுகளை முன்வைத்து மூவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அதன்படி யாழ்ப்பாண மேல்நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொலைக்குற்றச்சாட்டு, கடும் காயத்தை விளைவித்தமை, கொள்ளையடித்தமை உட்பட்ட குற்றச்சாட்டுக்களில் குறித்த மூவரும் குற்றவாளிகள் என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தீர்ப்பளித்ததுடன், இம்மூவருக்கும் ஆயுள் தண்டனையும், 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறின் 18 மாத கடூழிய சிறையும், 2 இலட்சம் ரூபா நஷ்ட ஈடும், கட்டத்தவறின் 2 வருட கடூழி சிறையும், அத்துடன் குறித்த மூவருக்கும் மரண தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.