நுவரெலியா ஹற்றனை அண்மித்துள்ள திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் நேற்றுமாலை 5 மணியளவில் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகியதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் நேற்று மாலை கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் கடும் காயங்களுக்குள்ளான 5 பேர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றப்பட்டவர்களில் 3 பெண்களும், 2 ஆண்களும் அடங்குகின்றனர். நாவலப்பிட்டி பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தலவாக்கலை பகுதியை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று பத்தனை மவுண்ட்வேர்ணன் பகுதியில் மண்மேடில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்கும் திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.