காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மீது தமக்கு நம்பிக்கையில்லை என காணாமல் போனோரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மனித உரிமைகள் பேரவையின் 37வது மாநாடு நிறைவடைந்துள்ள நிலையில், காணாமல் போனோரது உறவினர்கள் நேற்று கிளிநொச்சியில் சந்திப்பினை நடத்தினர். இதன்பின் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்கத்தின் இணைப்பாளர், கலாரஞ்சனி இதனைக் கூறினார்.தமது இரு முக்கிய கோரிக்கைகள் தொடர்பிலாவது அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் சங்க இணைப்பாளர் வலியுறுத்தியுள்ளார். 

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களிடத்தில் நம்பகத்தன்மையை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

அந்த ஆணைக்குழுவின் ஊடாக தங்களுக்கு தீர்வுகிடைக்கும் என்று நம்பிக்கை இல்லை என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அறிவித்துள்ளனர். அவர்களது நம்பிக்கையில்லாத தன்மைக்கான நியாயப்பூர்வமான காரணங்களை தாம் ஏற்றுக் கொள்வதாக சாலியப் பீரிஷ் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் சுயாதீமான செயற்பட்டு, அவர்களின் நீண்டகால கேள்விகளுக்கு பதிலளிப்பதே எமது இலக்கு. கடந்த காலத்தில் நியமிக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்கள் பிரயோசனப்படாமல் போனதைப் போல அல்லாமல், மக்களுக்கு பிரயோசனமாக சேவையை காணாமல் போனோர் அலுவலகம் வழங்க முயற்சிக்கும்.

தற்காக எதிர்வரும் வாரங்களில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்து, காணாமல் போனோரது உறவினர்களை சந்தித்து கலந்துரையாட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் சாலிய பீரிஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.