கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ்மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலிடத்ததை யாழ்ப்பாண மாணவி பெற்றுள்ளார். யாழ். வேம்படி மகளிர் கல்லூரி மாணவி மிருனி சுரேஷ்குமார் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளில் அகில இலங்கையில் முதலிடம் பெற்றுள்ளார்.
இதவேளை, கம்பஹா ரத்னமாலி மகளிர் கல்லூரி மாணவி கசுனி ஹங்சனா செனவிரத்ன மற்றும் சமோதி ரவிசா சுபசிங்க ஆகியோர் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதன்படி பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பார்வையிடமுடியும். இதேவேளை 2017 ஆண்டின் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்களின் வீதம் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2016 ஆம் ஆண்டு 69.94% ஆக இருந்த உயர்தரத்திற்கு தெரிவான மாணவர்களின் வீதம் இம்முறை 73.05% வரையில் 3.11% ஆல் உயர்வடைந்துள்ளது.
2016 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கணிதப் பாடத்தின் சித்தி வீதமும் 4.43% ஆல் அதிகரித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார். 2016 ஆம் ஆண்டு 62.81 ஆக இருந்த கணிதப் பாடத்தின் சித்தி வீதம் இம்முறை 67.24% ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் அனைத்து பாடங்களிலும் சித்தியடைந்து 9A எடுத்த மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2016 ஆண்டு 8224 ஆக இருந்த 9A எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை இம்முறை 9960ஆக அதிகரித்துள்ளதாக ஆணையாளர் கூறியுள்ளார்.
இதேவேளை பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்திற்காக பாடசாலை மூலமான விண்ணப்பதாரிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதிக்கு முன்னரும், தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் ஏப்ரல் 12 ஆம் திகதிக்கு முன்னரும் தமது விண்ணப்பங்களை பரீட்சைகள் திணைக்களத்துக்கு அனுப்ப வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.