உலகின் பல நாடுகளும் ரஷ்யாவின் வெளியுறவுத் துறை அதிகாரிகளை தங்கள் நாடுகளில் இருந்து வெளியேற்றி வருகின்றன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவின் 60 வெளியுறவுத் துறை அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்கா மட்டுமல்ல, ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்ய தூதர்களை வெளியேற்றுவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. பிரிட்டனில், முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கே ஸ்கிரிபால் மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற தாக்குதலில் ரஷ்ய ராணுவத்தால் பயன்படுத்தப்படும் நரம்பு மண்டலங்களை பாதிக்கக்கூடிய ரசாயனம் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள பின்னணியில் இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.“இத்தகைய தாக்குதல் சர்வதேச விதிகளை மீறும் செயல்” என அமெரிக்கா கூறுகிறது. ரஷ்யாவிற்கு எதிராக வெளியுறவுத் துறை அதிகாரிகள்மீது நடவடிக்கைகளை மேற்கொண்ட நாடுகளை அவுஸ்திரேலியா ஆதரிக்கிறது. பனிப்போர் மற்றும் சோவியத் ஒன்றியத்தின் மீதான பகைமைக்குப் பிறகு, ரஷ்யாவிற்கு எதிராக பல நாடுகள் அணி திரண்டிருக்கும் சந்தர்ப்பம் இது என கூறப்படுகிறது. இந்நடவடிக்கைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்யாவும் சவால் விடுத்துள்ளது.

ரஷ்ய தூதர்களை உலகின் பல நாடுகளிலிருந்து வெளியேற்ற வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருவதாக ரஷ்யா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியது. அமெரிக்கா தங்களை மிரட்டி, அச்சுறுத்த முயல்வதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கே லாவ்ரோஃப் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுவரை சுமார் 20 நாடுகள், 100 ரஷ்ய வெளியுறவுத் துறை அதிகாரிகளை வெளியேற்றுவதற்கு ஆணை பிறப்பித்துள்ளன. இதுதான் வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியுறவுத் துறை அதிகாரிகளை வெளியேற்றும் நடவடிக்கையென கூறப்படுகிறது. (பீபீசி)