கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய ஊழியர்கள் முன்னெடுத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துறையுடன் தொடர்புடைய அமைச்சர்களுக்கும் ஊழியர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டிற்கு அமைய போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுக்கான சம்பளத்தை 10,000 அதிகரிப்பது தொடர்பில் கடிதம் மூலம் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உரிய பதில் கிடைக்காத நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.விமான போக்குவரத்து சேவைகள் நிறுவனம் மற்றும் விமானநிலைய ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தொழிற்சங்கத்திற்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்தே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக கட்டுநாயக்க நிலையத்தை அண்டிய பகுதியில் இன்று காலை முதல் பதற்றமான சூழல் நிலவியது. இந்நிலையில் விமானநிலையத்தின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டிருந்தனர்.

விமானநிலையத்தின் அனைத்து நுழைவாயில்களையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தமையால் விமானநிலையத்திற்கு உள்ளேயும், வெளியேயும் நூற்றுக்கணக்கான பயணிகள் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்கியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.