மட்டக்களப்பு மாநகரசபைக்கு மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவு செய்யும் சபையின் முதலாவது அமர்வு இன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் மாநகரசபைக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள், மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மேயராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தி.சரவணபவன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தெரிவுக்காக கூட்டமைப்பின் சார்பாக தி.சரவணபவனும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் எஸ்.சோமசுந்தரம் ஆகிய இருவரின் பெயர்களும் பிரேரிக்கப்பட்டன.

இதில் சரவணபவனுக்கு ஆதரவாக 25 வாக்குகளும், சோமசுந்தரத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில் 2 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. பின்னர் மட்டக்களப்பு மாநகர சபையின் மேயராக தி.சரவணபவன் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.எம்.சலீம் சபைக்கு அறிவித்தார்.

சரவணபவன் மட்டக்களப்பு மாநகர சபையின் 14 ஆவது மேயராவார். தொடர்ந்து பிரதி மேயராக தமிழ்த் கூட்டமைப்பின் க.சத்தியசீலன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.