கலிபோர்னியாவில் உள்ள YouTube தலைமையகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு, தன்னைத்தானே சுட்டுக்கொண்ட பெண் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள YouTube தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூவர் காயமடைந்தனர். துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு, குறித்த பெண் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்பெண் யார் என்ற தகவல் இதுவரை தெரியாத நிலையில், அவர் குறித்த தகவலை அமெரிக்க பொலிஸார் வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவின் சன் டியாகோ மாகாணத்தில் வசித்து வந்த 39 வயதான நசீம் அக்தாம் என்ற பெண்ணே தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நசீம் உடற்பயிற்சிகள், பாரசீக கலாசாரம், சைவ உணவு உள்ளிட்டவற்றை YouTube இல் வீடியோவாகப் பதிவிட்டிருக்கிறார்.

அவருடைய வீடியோவிற்கு YouTube நிறுவனம் பாகுபாடு காட்டியதாகவும், பெரும்பாலான வீடியோக்கள் பார்வையாளர்களைச் சென்றடையாமல் YouTube நிறுவனம் செய்ததாகவும் தனது NasimeSabz.com என்ற பக்கத்தில் வீடியோ வடிவில் வெளியிட்டிருக்கிறார்.

மேலும், அதில் YouTube நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் விளம்பரப் பணத்தைச் சுரண்டுவதாகவும் YouTube சமமான வளர்ச்சியை அளிப்பதில்லை எனவும் தனது பதிவுகளில் சுட்டிக்காட்டியுள்ளார். YouTube நிறுவனத்தின் மீது இருந்த கோபத்தினால் நசீம் இந்தத் தாக்குதலை நடத்தி இருக்கக்கூடும் என அவரின் தந்தை குறிப்பிட்டுள்ளார். விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் இது தீவிரவாதத் தாக்குதல் இல்லை என தெரிவித்துள்ளனர்.