ஏப்பிரல், 03/2018

அதிமேதகு சந்திரிக்கா பண்டரநாயக்க அவர்கட்கு,

தேசிய நல்லிணக்க மற்றும் சகவாழ்வு செயலகம்

கனம் அம்மையார்,

இலங்கையின் சுதந்திரத்திற்கு பின்னரான ஆட்சி வரலாற்றில் புதுமையாக, நல்லாட்சி எனும் பெயரில் உருவாக்கப்பட்ட தேசிய கட்சிகளினது கூட்டாட்ச்சி, அதனை நம்பிய சிறுபான்மை மக்களினது நம்பிக்கைகளை மெல்ல மெல்ல சிதைத்து வருகின்றது என்பதுவே எமது அனுபவமாக அமைகின்றது.குறிப்பாக தமிழ் மக்களின் தரப்பு ஆட்சிமுறைமையில் எதிரணியாக இருந்தபோதிலும் கூட, இலங்கை பாராளுமன்றத்தின் பாரம்பரியங்களை மீறி அரச தரப்பினரின் செயற்பாடுகளிற்கு குறிப்பிடத்தக்க அளவு ஆதரவினை வழங்கி வந்துள்ளது.

தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை, அரசியல் கோரிக்கைகளை, சமூக முன்னேற்றத்தினை, ஒளிமயமான எதிர்காலத்தினை வென்றெடுக்க எமது தரப்பினரின் ஆதரவு அவசியமானதொன்று என்று இலங்கை தமிழர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் கரையான் புற்றினைப்போல் எமது வாழ்விடங்களை அரித்து கபளிகரப்படுத்துவதையும், கானல் நீராய் எம்மக்களின் கனவுகள் எம்மை கைவிட்டு போவதினையுமே நாம் காண்கின்றோம்.

முப்பது வருட அறவழிப் போராட்டத்திற்கு வித்திட்ட, முப்பது வருட ஆயுதப் போராட்டத்திற்கு நியாயமான முறையில் வலுச்சேர்த்த தமிழின விரோத நடவடிக்கைகள் அனைத்துமே தேசிய நல்லிணக்கம் என்ற போர்வைக்குள் கபடமாக அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

யுத்த காலத்தில் மந்த கதியில் இருந்த இவ்வாறான நடவடிக்கைகள் எமது கொல்லைபுறத்திலும், நடுமுற்றத்திலும் பரவலாக, வேகமாக எந்தவிதமான தடைகளும் இன்றி, கேட்பாரின்றி தொடர்ந்த வண்ணமுள்ளது.

“மகாவலி அபிவிருத்தி’ என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீக வாழ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த திட்டங்களும் தமிழர்களுக்கென நடைமுறைப்படுத்தப்பட்டதில்லை. இவை தமிழர்களுக்கு பயன்பட்டதுமில்லை. மாறாக தமிழர்களை அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து விரட்டி வெளியேற்றியுள்ளது. கல்லோயதிட்டம், மதுறுஓயாதிட்டம், யான்ஓயா திட்டம் என்று காலம்காலமாக தொடர்ந்த இனவிரோத நடவடிக்கைகள் தற்போது மீண்டும் கலாபோகஸ்வேவ, மாயாபுர, நாமல்புற போன்ற திட்டங்களாக வேகம்கொண்டு செயற்படுத்தப்படுகின்றது.

மகாவலி அபிவிருத்தி, வனப்பாதுகாப்பு, பறவைகள் மற்றும் விலங்குகள் சரணாலயம், இயற்கைஒதுக்கிடம் மற்றும் கடலும் கடல்சார்பாதுகாப்பு பிரதேசங்கள் என்கின்ற பெயர்களில் தமிழர்களின் வாழ்விடங்கள் அவற்றின் உரிமையாளரின் அனுமதிகளின்றி கபளீகரம் செய்யப்படுகின்றது

குறிப்பிட்டு சொல்லக்கூடிய அண்மைக்கால செயற்பாடுகளாக:

  • 2006 விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் மன்னார் நகரினையும் தாண்டி எடுக்கப்பட்ட 120,000 ஏக்கருக்கு மேற்பட்ட இயற்கை பாதுகாப்பு திட்டம்
  • 3 மீற்றருக்கு உயரமான மரங்களை கொண்ட வனபாதுகாப்பு அறிவித்தல்
  • சுண்டிக்குளம், யாழ் கடலேரி, இரனைதீவு, ஆனையிறவு, குஞ்சுபரந்தன் பிரதேசங்களை உள்ளடக்கிய பாதுகாப்பு வலயம்
  • மடு இயற்கை பாதுகாப்பு பிரதேசத்தில் இராணுவ முகாமும் அதன் செயற்பாடுகளும்
  • அரச அதிபருக்கும், மாகாண அதிகாரிகளுக்கும் தெரியாமல் மத்திய அதிகாரிகளும் நிறுவனங்களும் செயற்படுதல்
  • இவற்றினை செயற்படுதுவதூடாக, வடமாகாண விவசாய அபிவிருத்திகளுக்கு செயற்படுத்தும் முட்டுக்கட்டைகள்

போன்றன அறியக்கூடியதாக உள்ளது.

ஆற்றுநீரை விவசாய எழுச்சிக்கு பயன்படுத்துவதிற்கோ, வளங்களை பாதுகாப்பதிற்கோ, அன்றி விலங்குகளிற்கோ பறவைகளுக்கோ வாழ்விடங்களை உருவாக்கிகொள்வதிற்கு தமிழ்மக்கள் எதிரான உணர்வுகளை கொண்டவர்கள் அல்ல. நீரையும், நிலத்தையும், இயற்கையையும், விலங்குகள் மற்றும் பறவைகளையும் நேசித்து வாழ்ந்த, வாழ்கின்ற இன மக்கள் நாங்கள்.

நீரைக்கொண்டு வாருங்கள், அதை எமக்கு தாருங்கள், வளங்களை உருவாக்குவோம். அதற்காக எமது வாழ்விடங்களை அழிக்க வேண்டியதில்லை. பறவைகளை பாதுகாப்போம். அதற்காக மனிதர்களை விலங்குகள் போன்று விரட்டிகலைக்க வேண்டியதில்லை.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் பரப்பு வீச்சில் வனவளமும் நீர்வளமும் யுத்தத்தின் காரணமாக பாவிக்காமல் நாட்டின் சேமிப்பாகவே உள்ளதையும் நாம் அறிவோம். அவை இயற்கை எம் அனைவருக்கும் அளித்த கொடையாகும். அதன் பயன்பாடுகள் அனைவருக்கும் பொதுவானவை. சமனானது. நிச்சயமாக நிலத்தின்மேல் உரிமைகொண்ட பூர்வீக மக்களுக்கு உரித்தானது.

இந்த நிலங்களை இன மத பேதமின்றி விவசாயிகள் பயன்படுத்துவது வரவேற்ககூடிய ஒரு செயற்பாடு ஆகும். ஆனால் திட்டமிட்ட இன வேறுபாடுபாடுகள் மற்றும் விரோத செயற்பாடுகளிற்கு பயன்படுத்துவதும், இன்னொரு இனத்தின் வாழ்வியலினை திட்டமிட்ட வகையில் அழிக்கவும் அரச வளங்களையும் பயன்படுத்தி இனப்பரம்பலினை மாற்றியமைத்து வளங்களை சூறையாடுவதும் தடுத்து நிறுதப்படவேண்டும்.

இலங்கை தீவில் இனங்களுகிடையிலான விரிசலுக்கும், தரப்பினருக்கிடையிலான நீருபூத்த நெருப்பாக விளங்கும் பகையுணர்வுக்கும் மகாவலி அபிவிருத்தி திட்டங்களும், சரணாலய திட்டங்களும், பாரபட்சமான வனப்பாதுகாப்பு நடவடிக்கைகளும் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்துள்ளதினை அனைவரும் அறிவார்கள்.  இந்த நாட்டில் உண்மையான சமாதானதிற்காக ஏங்குபவர்களுக்கும், கடந்தகால தவறுகளுக்காக வருந்துபவர்களுக்கும் இவற்றினைபற்றி நன்கு புரியும்.

சிங்கள அரசியல்வாதிகளாலும், புதிஜீவிகளினாலும், தேசப்பற்றாளர்களினாலும் முன்மொழியப்பட்ட தேசிய நல்லிணக்கத்திற்கான பரிந்துரைகளில் கூட இவையெல்லாம் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

ஆனாலும் இன்றைய ஆட்சியாளர்களும் அரசு இயந்திரமும் எந்தவிதமான எதிர்கால அக்கறையுமின்றி, எதிர்கால சந்ததியினரின் வளமான முன்னேற்ற திட்டமிடல் எண்ணமும் இன்றி, தமது வழமையான பேரினவாத சிங்கள பௌத்த மயமாக்கலை பல்வேறு திட்டங்களின் பெயரில் தொடர்ந்து அரங்கேற்றி வருகின்றனர்.

தமிழர் தரப்பின் ஆரோக்கியமான இணக்க அரசியல் எண்ணக்களும் செயற்ப்பாடுகளும் தொடர்ந்து உதாசீனப்படுத்தப்படுமானால் அல்லது பலவீனமானதாக கருதப்படுமானால் அதன் விளைவுகளையும் இந்த நாடு அனுபவிக்கும் காலமும் வெகு தொலைவில் இல்லை என்பதினையும் வலியுறுத்தி கூறவிரும்ம்புகின்றேன்.

நாட்டை சின்னாபின்னமாக்கிய கொடூரமான யுத்தம் உருவாக ஏதுவாயிருந்த மூலகாரணங்கள் மீண்டும் ஒரு சுற்றுவட்டத்தில் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுவதை கண்கூடாக காண்கின்றோம். அதன் பாதகமான நன்கு தெரிந்து வைத்துக்கொண்டுதான் இவை முன்னெடுக்கப்படுகின்றது என்பதுதான் எமது நாட்டின் ஆட்சிமுறைமையின் மிகப்பெரிய மன்னிக்கமுடியாத சோகமும் கேவலமுமாகும்.

நாங்கள் கேட்பதெல்லாம், சொல்லுவதெல்லாம் ஒன்றுதான். அதாவது சாதரண சாமானிய சிங்கள மக்கள் நாட்டின் எந்த திசையிலும் நிலங்கள் வாங்கி குடியிருப்பதிற்கு நாம் எதிரானவர்கள் அல்ல.

ஆனால் அரசு திட்டமிட்ட வகையில் கபட நோக்குடன் தமிழர்களின் இருப்பை சீர்குலைக்கும் வகையில் செயற்படுத்தும் உருவாக்கும் குடியிருப்பு திட்டங்களினை நாம் நிச்சயம் எதிர்ப்போம்.

தமிழ் மக்கள் சிங்கள மக்களின் வாழ்விடங்களுக்கு வந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்புக்களை கொள்ளையிட எக்காலத்திலும் எண்ணம் கொண்டிருக்கவில்லை. அதற்கான தேவையும் இல்லை.

வளமான எங்களின் வாழ்விடங்களை எங்களுக்கு மீண்டும் தாருங்கள். எங்களை எங்கள் நிலங்களில் தொழில்களையும் ஈடுபட அனுமதியுங்கள் எங்கள் நாளாந்த வாழ்வாதரத்தினை கொண்டு செல்ல, எங்கள் வளங்களின் ஆதரத்தினை எங்களிடமே விட்டுவிடுங்கள். அதுவே எமது உறுதியான கோரிக்கையாகும்.

தமிழராக, இலங்கையராக நாமும் வாழ்ந்து எல்லோரையும் வாழ வைக்கவேண்டும் என்பதே எம்முடைய விருப்பம்.

இதனை அனுமதிப்பதா இல்லை எல்லா மக்களும் எல்லா இனமும் எல்லா மதங்களும் தொடர்ச்சியாக சீரழிவதற்கான ஏதுவான நிலைமைகளை உருவாக்குவதா என்பதினை நல்லாட்சி எனும் மாயைக்குள் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும் அரசும் அரச இயந்திரமுமே தீர்மானிக்க வேண்டும்.

மக்கள் சேவையில்,

க.சிவநேசன் – அமைச்சர்

வடக்கு மாகாணசபை