சர்வதேச அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு இலங்கை படையினரை அனுப்புவதற்கு முன்னர் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதியை பெறவேண்டும் என்ற நிபந்தனையை இலங்கை இராணுவம் மீறிவிட்டது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு குற்றம்சாட்டியுள்ளது.
எமது அனுமதியை பெறாமல் லெபனானிற்கு படையினர் சென்றுள்ளனர் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் தீபிக உடகம இதனை தெளிவுபடுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.ஐக்கிய நாடுகள் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு இலங்கை படையினரை அனுப்புவதற்கான அனுமதியை வழங்குவதற்கு இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு மாத்திரம் ஐ.நா. அனுமதி வழங்கியிருந்தது என தீபிக உடகம தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவிற்கு 204 இலங்கை படையினரின் விண்ணப்பங்கள் கிடைத்தன எனினும் நாங்கள் அனுமதியளிப்பதற்கு முன்னர் 49 படையினரை இலங்கை இராணுவம் லெபனானிற்கு அனுப்பியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் அனுமதியின்றி இராணுவம் எவரையும் அமைதிப்படை நடவடிக்கைகளிற்கு அனுப்ப முடியாது இதன் மூலம் இலங்கை இராணுவத்தினர் எங்களுடன் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கையை மீறிவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.