வெளிநாட்டு வேலைவாய்ப்பினை பெற்றுச்செல்லும் பணிப்பெண்கள் கருத்தடை மருந்துகளை உட்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அவர்கள் இலங்கையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மருத்துவ பரிசோதனை ஒன்றை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஊடகம் ஒன்று நேற்றையதினம் வெளியிட்ட செய்தியில், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள வீடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்லும் பெண்கள், கருத்தடை மருந்துக்களை உபயோகித்ததன் பின்னரே வெளிநாடு செல்ல அனுமதிப்பர் என தெரிவித்திருந்தது. இலங்கையில் தொழில்படும் உத்தரவு பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள், வெளிநாட்டு பணிப்பெண்களாக செல்லும் பெண்களை இந்த மருந்தினை எடுத்ததன் பின்னரே வேலை வாய்ப்பினை வழங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் மனூஷா நாணயகார, இந்தத் தகவலை முற்றாக நிராகரிப்பதாகவும், அவ்வாறான நடைமுறை அமுலில் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் பணிப்பெண்கள் வெளிநாடு செல்வதற்கு முன்னர் மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனையில், குறித்த பெண் கர்ப்பிணியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் அனுமதி பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் சங்கம் என்பனவும் இப்படியான நடைமுறை அமுலில் இல்லை எனத் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.