ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் சிபாரிசுகளை முழுமையாக இலங்கை அரசாங்கம் ஏற்றுகொண்டதன் விளைவாகவே இலங்கையில் இராணுவ வெற்றி தினம் நிறுத்தப்பட்டுள்ளது. இனியொருபோதும் இலங்கையில் இராணுவ வெற்றி தினத்தைக் கொண்டாட இடமளிக்க மாட்டோம் என இலங்கை அரசாங்கம் சர்வதேசத்திடம் வாக்குறுதி வழங்கியுள்ளது என ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இராணுவ வெற்றி விழாக்கள் இடம்பெறக்கூடாது என மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள நிபந்தனைகள் வெளிவந்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இலங்கையின் பிரதிநிதியாக மனித உரிமைகள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் வதிவிடப் பிரதிநிதி சரத் வீரசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதில் இருந்து தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகள் இராணுவ வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகின்ற நிலையில் ஆட்சி மாற்றத்தின் பின்னரே இலங்கையில் இராணுவ வெற்றி தினம் கொண்டாடப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.
புலிகளைக் கொன்று எமது நாட்டினைக் காப்பாற்றிய இராணுவத்தைப் போற்றுவதை விடவும் யுத்தத்தால் உயிர் நீத்த பயங்கரவாதிகளை நினைவுகூரவே இந்த அரசாங்கம் விரும்புகின்றது. சர்வதேச அமைப்புகளும் புலம்பெயர் புலி அமைப்புகளும் இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப் பட்ட பின்னர் தமது இருப்பினைத் தக்க வைக்க கடுமையான நிபந்தனைகளை விதித்துள்ளன.
அதேபோல் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனீவா கூட்டத்தொடரின் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை முன்வைத்த கோரிக்கைகளும் அதேபோல் இம்முறை 37 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட 230 நிபந்தனைகளில் இலங்கை அரசாங்கம் 170 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது. இந்த நிபந்தனைகளில் முக்கியமான விடயங்கள் அனைத்துமே உள்ளடக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, யுத்தக் குற்றங்களை ஆராய்வது, இராணுவத்தை பலவீனப்படுத்துவது, வடக்கு, -கிழக்கில் முகாம்களை அகற்றுவது, இராணுவ வெற்றி தினம் உள்ளடங்கிய நிகழ்வுகளை நீக்குவது என்ற கடுமையான நிபந்தனைகளையும் சர்வதேச தலையீடுகள், புலிகளின் முதலீடுகளை முன்னெடுக்கும் நடவடிக்கைகள் என அனைத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இதுவே இன்று இலங்கையில் இராணுவ தண்டிப்புக்கள் வரையில் நிகழ்ந்து வருகின்றன. இன்னும் சிறிது காலத்தில் புதிய அரசியல் அமைப்பின் மூலமாக பிரிவினையினை பலப்படுத்தும் நடவடிக்கைகளும், காணாமல் போனோர் அலுவலகம் பலமடைவதன் மூலமாக இராணுவத்தை தண்டிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.