பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேரையும் கட்சியிலிருந்து நீக்கப்போவது இல்லையெனத் தெரிவித்த, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் மஹிந்த அமரவீர, எந்தவொரு சூழ்நிலையிலும் கட்சியுடன் இணைந்திருப்பதற்கு அவர்கள் கடிதம் மூலம் விளக்கமளித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வீரக்கெட்டியவில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதே ஜனாதிபதியின் எண்ணமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நம்பிக்கையில்லாப் பிரேரணை விடயத்தில், கட்சியை பலப்படுத்தும் தீர்மானத்திற்கு அமையவே செயற்பட்டதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியினர், தமது கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக செயற்படுவார்களாயின், அதற்கு இடமளிக்கப்போவது இல்லை எனவும் தெரிவித்த அமைச்சர், உறுப்பினர்களுக்காக தமது கட்சி எப்போதும் முன்நிற்கும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

நாளைய செயற்குழுக் கூட்டத்தின்போது கட்சியை பலப்படுத்தி, ஒன்றிணைக்கும் தீர்மானத்தைத் தவிர வேறு எவ்வித தீர்மானங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தை சங்கடத்திற்கு உள்ளாக்கும் எவ்வித தீர்மானத்தையும், தமது கட்சி ஒருபோதும் எடுக்காது எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.