பொத்துவில் பிரதேசத்திற்கு உட்பட்ட சில பகுதிகளில் காணப்படும் தமது காணிகளை வனவள பாதுகாப்பு திணைக்களத்தினர் அடையாளப்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பொத்துவில் பிரதேசத்திற்கு உட்பட்ட கோமாரி, மணந்தாபெட்டியாறு, முதுரைத்தீவு, இணப்பாளையடி ஆகிய பிரதேசங்களில் உள்ள 300 ஏக்கர் வேளாண்மைக் காணியை வனவளத் திணைக்களத்தினர் அடையாளப்படுத்தியுள்ளனர். யுத்த இடம்பெயர்வின் பின்னர் 2009 ஆம் ஆண்டு அங்கு நிலைகொண்டிருந்த இராணுவம் வெளியேறிய போதும், தற்போது தமது வேளாண்மை காணிகளில் வேளாண்மை செய்ய முடியாமல் போயுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், அதனை வனவளத் திணைக்களம் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதேவேளை இந்தக் குற்றசாட்டு தொடர்பில் வனவள பாதுகாப்பு திணைக்களத்தின் பொத்துவில் அலுவலக அதிகாரி தெரிவிக்கையில், இந்தக் காணி வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தம் என 2010ஆம் ஆண்டு வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
காணியின் உண்மையான உறுதிப் பத்திரம் இருந்தால் அதனை தமது அலுவலத்திற்கு கொண்டு வந்து காண்பிக்குமாறும் அதன் பின்னர் அது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.