ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் சிபா­ரி­சு­களை முழு­மை­யாக இலங்கை அர­சாங்கம் ஏற்­று­கொண்­டதன் விளை­வா­கவே இலங்­கையில் இரா­ணுவ வெற்றி தினம் நிறுத்­தப்­பட்­டுள்­ளது. இனி­யொ­ரு­போதும் இலங்­கையில் இரா­ணுவ வெற்றி தினத்தைக் கொண்­டாட இட­ம­ளிக்க மாட்டோம் என இலங்கை அர­சாங்கம் சர்­வ­தே­சத்­திடம் வாக்­கு­றுதி வழங்­கி­யுள்­ளது என ரியர்­ அட்­மிரல் சரத் வீர­சே­கர தெரி­வித்துள்ளார்.

இலங்­கையில் இரா­ணுவ வெற்றி விழாக்கள் இடம்­பெ­றக்­கூ­டாது என மனித உரி­மைகள் ஆணைக்­குழு முன்­வைத்­துள்ள நிபந்­த­னைகள் வெளி­வந்­துள்­ள­தாக விமர்­ச­னங்கள் எழுந்­துள்ள நிலையில், இலங்­கையின் பிர­தி­நி­தி­யாக மனித உரி­மைகள் பேர­வையை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் முன்னாள் வதி­விடப் பிர­தி­நிதி சரத் வீர­சே­க­ர­ இதனைக் குறிப்­பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறு­கையில்,

இலங்­கையில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதில் இருந்து தொடர்ச்­சி­யாக ஆறு ஆண்­டுகள் இரா­ணுவ வெற்றி தினம் கொண்­டா­டப்­பட்டு வரு­கின்ற நிலையில் ஆட்சி மாற்­றத்தின் பின்­னரே இலங்­கையில் இரா­ணுவ வெற்றி தினம் கொண்­டா­டப்­ப­டு­வது தடை செய்­யப்­பட்­டுள்­ளது.

புலி­களைக் கொன்று எமது நாட்­டினைக் காப்­பாற்­றிய இரா­ணு­வத்தைப் போற்­று­வதை விடவும் யுத்­தத்தால் உயிர் நீத்த பயங்­க­ர­வா­தி­களை நினை­வுகூ­ரவே இந்த அர­சாங்கம் விரும்­பு­கின்­றது. சர்­வ­தேச அமைப்­பு­களும் புலம்­பெயர் புலி அமைப்­பு­களும் இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­ப­டுத்தப் பட்ட பின்னர் தமது இருப்­பினைத் தக்க வைக்க கடு­மை­யான நிபந்­த­னை­களை விதித்­துள்­ளன.

அதேபோல் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனீவா கூட்டத்தொடரின் போது ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேரவை முன்­வைத்த கோரிக்­கை­களும் அதேபோல் இம்­முறை 37 ஆவது மனித உரி­மைகள் கூட்டத் தொடரில் முன்­வைக்­கப்­பட்ட 230 நிபந்­த­னை­களில் இலங்கை அர­சாங்கம் 170 நிபந்­த­னை­களை ஏற்­றுக்­கொண்­டுள்­ளது. இந்த நிபந்­த­னை­களில் முக்­கி­ய­மான விட­யங்கள் அனைத்­துமே உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ளன.

குறிப்­பாக, யுத்தக் குற்­றங்­களை ஆராய்­வது, இரா­ணு­வத்தை பல­வீ­னப்­ப­டுத்­து­வது, வடக்கு, -கிழக்கில் முகாம்­களை அகற்­று­வது, இரா­ணுவ வெற்றி தினம் உள்­ள­டங்­கிய நிகழ்­வு­களை நீக்­கு­வது என்ற கடு­மை­யான நிபந்­த­னை­க­ளையும் சர்­வ­தேச தலை­யீ­டுகள், புலி­களின் முத­லீ­டு­களை முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கைகள் என அனைத்­தையும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளனர்.

இதுவே இன்று இலங்­கையில் இரா­ணுவ தண்­டிப்­புக்கள் வரையில் நிகழ்ந்து வருகின்றன. இன்னும் சிறிது காலத்தில் புதிய அரசியல் அமைப்பின் மூலமாக பிரிவினையினை பலப்படுத்தும் நடவடிக்கைகளும், காணாமல் போனோர் அலுவலகம் பலமடைவதன் மூலமாக இராணுவத்தை தண்டிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.