இலங்கை மின்சார சபையின், பொறியியலாளர்கள் இரண்டு வாரங்களுக்குள் தொழிற்சங்க நவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

நீண்டகால மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பது தொடர்பில், தாம் முன்வைத்த முன்மொழிவுகள் குறித்து இலங்கை மின்சார சபை எவ்வித பதிலையும் வழங்கவில்லை எனவும், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, மின்சார சபை, பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை, நீண்டகால மின்சார உற்பத்தி நிலையங்களை நிறுவுவதில் அக்கறையின்மையை காட்டுவதாகவும், இலாப நோக்கில் செயற்படும் தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் ஊடாக மின்சாரத்தை கொள்வனவு செய்து மின்சார சபை அதிகாரிகள் ஆதாயமீட்டுவதாகவும் சௌமிய குமாரவடு குற்றம்சாட்டியுள்ளார்.

இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி திட்டமானது இலங்கைக்கு பொறுத்தமானதாக அமையுமெனவும், அதனை அடிப்படையாக கொண்டு மின்விநியோக திட்டமொன்றை தயாரிக்குமாறு வலியுறுத்தியும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாகவும், மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு கூறியுள்ளார்.