கொழும்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமத்திபாலவை, பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து நீக்கிவிடுவதற்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆலோசித்து வருவதாக உள்வீட்டுத் தகவல் தெரிவிக்கின்றது.
அதனடிப்படையில், தமிழ்-சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர், பிரதி சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கையளிப்பதற்கு, ஐக்கிய தேசிய முன்னணி நடவடிக்கை எடுத்துவருவதாக தெரியவருகின்றது.இந்தத் தீர்மானத்தை, சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்லவின் ஊடாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அறிவிக்குமாறு, முன்னணியினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் 6 அமைச்சர்களுக்கு எதிராக, ஐக்கிய தேசிய முன்னணியினரால் கையளிக்கப்பட்டிருந்த, நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு முன்னணியும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணக்கம் தெரிவித்திருந்தன என்றும் சபை முதல்வர் தெரிவித்திருந்தார்.
எனினும், அந்த ஆறு நம்பிக்கையில்லாப் பிரேரணையை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கடந்த 06ம் திகதியே ஐக்கிய தேசிய முன்னணியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.