இலங்கை, சீனாவுக்கு இடையில் மிகப்பெரிய செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பேச்சுகள் முன்னெடுக்கப்படுவதாக சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இயற்கை எரிசக்தி நிலையத்தை அமைத்தல், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு, சீமெந்து, உருக்கு மற்றும் இரும்பு உற்பத்தி ஆகிய துறைகளில் முதலீடுகளை மேறகொள்வது தொடர்பில் இந்த பேச்சுகளில் அவதானம் செலுத்தியுள்ளதாக, சீனத் தூதுவர் செங் சியுவான் தெரிவித்துள்ளார். இந்த செயற்றிட்டங்கள் ஊடாக உள்நாட்டு பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமெனவும், மக்களின் வாழ்க்கைத்ததரம் மற்றும் நாட்டின் அபிவிருத்தியிலும் பாரிய முன்னேற்றங்களை காணமுடியுமெனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக நாட்டில இடம்பெற்ற யுத்தம் தேசத்தின் பொருளதாரம் மற்றும் சமூக அபிவிருத்தி ஆகியவற்றை பல வகையிலும் பாதித்ததாக சீன தூதரகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா ஏற்கனவே இலங்கையின், துறைமுகம், அதிவேக நெடுஞ்சாலை, விமானநிலையம், நிலக்கரி மின்னுற்பத்தி உள்ளிட்ட பல செயற்றிட்டங்களில் தமது பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், சீன நிறுவனங்கள் சுமார் 15 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான உட்கட்டுமான செயற்றிட்டங்களை இலங்கையில் நிறைவு செய்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.