யாழ்ப்பாணத்தில் இருந்து படகொன்றின் மூலம் தமிழகம் சென்ற துருக்கிய நாட்டவர் ஒருவர், ராமேஸ்வரம் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் தீவிரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே கைது செய்யப்பட்டார். 43 வயதான மிஹிர் டெவ்ரிம் என்ற அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தீவிரவாதத் தொடர்பு இல்லாதவர் என்று தெரியவந்துள்ளது. குறித்த நபர் துருக்கியில் குர்திஸ் தொழில் கட்சியின் செயற்பாட்டாளராக இருந்த நிலையில், அங்கு ஏற்பட்ட உயிரச்சுறுத்தல் காரணமாக நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார். கடந்த மாதம் 28ம் திகதி மலேசியாவில் இருந்து கொழும்பு வந்த அவர், அங்கிருந்து யாழ்ப்பாணம் சென்று படகொன்றின் ஊடாக ராமேஸ்வரத்தைச் சென்றடைந்ததாக கூறப்படுகிறது.

துருக்கியில் இருந்து வெளியேறிய அவர் உக்ரெயின், ரஷ்யா, ஐக்கிய அரபு ராச்சியம், கசகஸ்தான், ஈராக், எகிப்த்து, ஜோர்டான், மொங்கோலியா, சீனா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் தங்கியிருந்ததாகவும், அவரது பயணத்துக்கான நிதியுதவியை தாய்லாந்தில் இருக்கும் அவரது சகோதரர் ஒருவர் வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது.