புதிய தேர்தல் முறைமைகள் தொடர்பில் கருத்துரைப்பதற்கும் மற்றும் யோசனைகளை முன்வைப்பதற்குமான சர்வகட்சிக் கூட்டத்தை நடத்துமாறு அழைப்பு விடுப்பதற்கு, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் செயற்பாடு (பெஃபரல்) தீர்மானித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறைமையின் கீழ் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் குளறுபடிகள், அந்த தேர்தல் முறைமையின் பிரகாரம், எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாயின் ஏற்படக்கூடும் பிரச்சினைகள் தொடர்பில் கருத்துகளைக் கேட்டறிவதற்கே, இந்த சர்வகட்சிக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதென, அவ்வமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். அதனடிப்படையிலான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அதில், தேர்தல்கள் ஆணைக்குழு, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபை அமைச்சின் பிரதிநிதிகள், பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் இதில் கலந்துகொண்டனர்.
புதிய தேர்தல் முறைமையை, பிரச்சினைகள் இன்றி எதிர்காலத்தில் செயற்படுத்த முடியுமா, உள்ளூராட்சி மன்றங்களில் இருக்க 60க்கு 40 என்ற விகிதாசார முறைமைக்கு பதிலாக 50க்கு 50 என்ற விகிதாசார முறைமையைப் பயன்படுத்த முடியுமா என்பது தொடர்பிலும் சர்வகட்சிக் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது என்றும் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
“அப்படியில்லையாயின், விருப்பு வாக்குமுறைமையே உகந்ததா என்பது தொடர்பிலும் அந்தக் கூட்டத்தில் ஆராயப்படும்” என்றார். “அவ்வாறான சர்வகட்சிக் கூட்டத்துக்குப் பின்னர் நியமிக்கப்படும் குழுவின் மூலமாக, அந்த கருத்துகள் மற்றும் யோசனைகள் தொடர்பில், ஆராய்ந்து நல்லதொரு முறைமை எதுவென்பது தொடர்பில் யோசனையைத் தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சர்வகட்சிக் கூட்டத்தை எப்போது நடத்துவது, தகவல்களைத் திரட்டிக்கொள்ளும் முறைமை என்ன, என்பது தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும்” என்றும் அவர் குறிப்பிட்டார்.