புதிதாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள தேசிய வருமான வரி சட்டத்தின் மூலம் 5 இலட்சம் பேர் வரி அறவீட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

நிதி அமைச்சின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய வருமான வரி அறவீட்டின் மூலம் அநீதிகள் இழைக்கப்பட்டுள்ளதாக தொடர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் பணிபுரிபவர்களால் அனுப்பப்படுகின்ற பணம், மரண மற்றும் நற்பணி மன்றங்கள், மூத்த பிரஜைகளுக்கான சேமிப்புகள், சமய நிறுவனங்கள் என்பனவற்றின் மீதும் அசாதாரணமான முறையில் வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. எனினும், புதிய தேசிய வருமான வரி சட்டத்தின் மூலம் அவ்வாறான வரிகள் எதுவும் அறவிடப்படவில்லை என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும், புதிய சட்டத்தின் ஊடாக அறவிடப்படுகின்ற வரிகள் மக்களை பாதிக்கும் வண்ணம் அமைக்கப்படவில்லை எனவும் நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, வருமானத்திற்கு ஏற்ப வரிசெலுத்தும் சட்ட திருத்தத்தின் அடிப்படையில், வருடாந்தம் 12 லட்சம் ருபாய் வருமானமாக ஈட்டுகின்றவர்களுக்கு வரி அறவிடப்பட மாட்டாது.

இதற்கு முன்னதாக வருடாந்தம் ஏழரை லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகின்றவர்கள் வருமான வரி செலுத்தும்நிலை காணப்பட்டது. எனினும், இத்தொகை 12 லட்சமாக அதிகரிக்கப்பட்டதன் மூலம் சுமார் 5 லட்சம் பேர் வரையில் வரி செலுத்துவதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 18வயது நிரம்பிய அனைவருக்கும் வரிகோப்பு ஒன்று பேணும் எந்த ஒரு திட்டமும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் நிதியமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.