நாட்டின் பல மாகாணங்களில் இன்று முதல் எதிர்வரும் 16 ஆம் திகதிவரை இடியுடன் கூடிய மழை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக மலையக பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பதிவாகக்கூடும். இடியுடன் கூடிய மழையின் போது 70 – 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இதன்போது தொலைபேசி மற்றும் மின்சார உபகரணங்கள் பாவிப்பதை தவிர்க்குமாறும், மிதிவண்டி, உழவு இயந்திரம் மற்றும் படகுகள் செலுத்துவதை தவிர்க்குமாறும் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.கடும் காற்று காரணமாக மின்கம்பங்கள் சரிந்துவிழும் அபாயம் காணப்படுவதனால் பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறும், அவரச நிலைமைகளின் போது அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளின் உதவியை பெற்றுக்கொள்ளுமாறும் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் நேற்றைய தினம் விடுத்திருந்த எச்சரிக்கை அறிவிப்பு தொடர்ந்தும் அமுலில் உண்டு. கடந்த சில தினங்களாக இந்த இரண்டு மாவட்டங்களிலும் ஏற்பட்ட சீரற்ற காலநிலையின் காரணமாக மண்சரிவு அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.