வடக்கு கிழக்கில் தனியாருக்கு சொந்தமான காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என சுகாதார அமைச்சரும் இணை அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பத்து நிபந்தனைகளுடன் எதிராக வாக்களித்தது. குறித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவது குறித்து அரசாங்கத்தில் கலந்துரையாடப்பட்டதா என அமைச்சரவை சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜீத்த தமிழ் மக்களின் சொந்தமான நிலங்கள் முழுமையாக விடுவிக்கப்ட வேண்டும் என்பது அவர்களின் தொடர் கோரிக்கையாகும். கடந்த அரசாங்கத்தின் போதும் அநேகமான காணிகள் விடுவிக்கப்பட்டன.

கடந்த அரசாங்கத்தில் நன்மையான செயலாக நான் அதை கூறுவேன். இந்த அரசாங்கத்திலும், அது தொடர்கிறது. மேலும், இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகள் சில தொடர்ந்தும் விடுவிக்கப்படாமல் உள்ளது. அவை விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என நான் தொடர்ந்து நாடாளுமன்றில் வலியுறுத்தி வருகிறேன்.

வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகள் விடுவிக்கப்பட்டால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஊடகவியலாளர் ஒருவர் இதன் போது கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ராஜீத்த, தெற்கில் இருப்பவர்களை ஒருநாள் அவர்களின் சொந்த காணிகளில் இருந்து வெளியேற்றி அவ்விடத்தை வேறு ஒரு நபர் கைப்பற்றினால் தெரியும் வடக்கு மக்களின் வேதனை.

அங்கு சென்று பாருங்கள் அவர்கள் படும் வேதனையை என ஆவேசமாக தெரிவித்தார். என்னை பொறுத்த வரையில், வடக்கு மக்களின் காணிகள் உடன் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதற்கான செயற்பாடுகளை நான் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.