யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்றத்திற்கான மக்களிடம் இன்றைய தினம் கையளிக்கப்பட்டுள்ளன.
மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையில் உள்ள மைதானத்தில் இடம்பெற்ற இந்த காணி கையளிப்பு நிகழ்வில் இராணுவத் தளபதி மகேஸ் சேனாநாயக்க பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு காணிகளை உத்தியோகப்பூர்வமாக மக்களிடம் கையளித்துள்ளார்.
தமிழ் சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு படையினர் வசமிருக்கின்ற காணிகள் விடுவிக்கப்படுமென இரானுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க தெல்லிப்பழை நல்லிணக்கபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டிருந்தார்.
அதே போன்று 650 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளரும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையிலையே புத்தாண்டுக்குப் பின்னர் விடுவிக்கப்படுவதாகக் கூறப்பட்ட இக் காணிகள் புத்தாண்டுக்கு முன்னதாக விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய 5 கிராம சேவகர் பிரிவுகளைச் சேரந்த 12 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 964 குடும்பங்களுக்கு சொந்தமான 683 ஏக்கர் காணிகள் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை கடந்த 1990ஆம் ஆண்டு முதல் படையினர் ஆக்கிரமித்து வைத்திருக்கும் பொது மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றதனடிப்படையில் படிப்படியாக காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது