சிரியா மீதான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், நோக்கம் நிறைவேறியதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் (இந்தத் தாக்குதலில் பயன்படுத்திய) அறிவுக்கும் படை வலிமைக்கும் நன்றி கூறியுள்ளார்.

இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியாது என்று குறிப்பிட்ட அவர் நோக்கம் நிறைவேறியதாகவும் தெரிவித்துள்ளார்.
கூட்டுப் படையினர் சிரியாவில் அரசுக்கு சொந்தமான மூன்று இடங்கள் மீது சனிக்கிழமை குண்டு வீசினர். ரசாயன ஆயுதங்கள் தயாரிக்கப்படும், இருப்புவைக்கப்படும் இடங்கள் என்று அவற்றை இந்த நாடுகள் குறிப்பிட்டன.
கடந்த வாரம் டூமா நகரில் சிரியாவின் அரசுப் படைகள் நடத்தியதாகச் சொல்லப்படும் ரசாயனத் தாக்குதலுக்குப் பதிலடி தரும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்தத் தாக்குதலை மிகவும் கடுமையான முறையில் கண்டிப்பதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்தார்.
சிரியாவின் நட்பு நாடான ரஷ்யா, அந்த நாட்டில் உள்ள தமது படையினர் தாக்கப்பட்டால் ராணுவ ரீதியாக பதிலடி தரப்படும் என்று எச்சரித்தது.

காட்டுமிராண்டித் தனத்துக்கு எதிராக தமது நியாய உரிமை உள்ள வலிமையை அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியவை செயல்படுத்திக் காட்டியதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

சிரியா மீது பிரிட்டன், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் கூட்டாக தாக்குதல் நடத்தியது வெற்றிகரமாக அமைந்ததாக நம்பிக்கை இருக்கிறது என பிரிட்டன் பிரதமர் தெரீசா மே தெரிவித்துள்ளார்.
மேலும், இது சட்டப்பூர்வமானதுதான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
இது குறித்து பேசிய பிரதமர் மே, இந்த தாக்குதல்களால், ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கான சிரியாவின் திறன் குறைந்துவிட்டதாக தெரிவித்தார்.
ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதை சர்வதேச சமூகம் பொறுத்துக் கொள்ளாது என்ற செய்தி இத்தாக்குதல் மூலம் தெரிவிக்கப்பட்டது’ என்றும் கூறினார்.