முல்லைத்தீவு மாவட்டத்தில் தங்களுடைய பூர்விக நிலமீட்புக்காக போராட்டம் மேற்கொண்டுவரும் கேப்பாபுலவு மக்கள் இன்று (14) 413 ஆவது நாளாக தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றார்கள்.

கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி கேப்பாபுலவு இராணுவ படை கட்டளை தலைமையகம் முன்பாக கூடாரம் அமைத்து

தமது சொந்த நிலத்தை இராணுவத்திடமிருந்து மீட்டுத்தருமாறு கோரி தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்த மக்கள் இரண்டாவது சித்திரை புத்தாண்டையும் வீதியில் கொண்டாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழ் சிங்கள புத்தாண்டில் கேப்பாபுலவில் போராட்டம் மேற்கொள்ளும் மக்களுக்கு இன்று (14) படையினர் இனிப்பு பண்டங்கள் வழங்கியுள்ளனர்.

இன்று (14) பிறந்துள்ள தமிழ், சிங்கள புத்தாண்டு நாளில் கேப்பாபுலவில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைத்த தலைமையகத்தின் மக்கள் தொடர்பாளர் அதிகாரி லெப்ரினன் கேர்னல் அபேவர்த்தன தலைமையிலான ஆண், பெண் படையினர் சிங்கள கலாச்சாரத்திற்கு அமைவாக உடை அணித்து இனிப்பு பண்டங்கள் கொண்டுவந்து போராட்ட மக்களுடன் பரிமாறிக்கொண்டுள்ளார்கள்.