ஐந்து பேர் உயிரிழந்து பலர் பாதிக்கப்படுவதற்கு காரணமாக அமைந்த களுத்துறை மாவட்டத்தின் ஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் முகாமையாளர், ஹொரண பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தொழிற்சாலையில் உள்ள அமோனியா தாங்கியை சுத்தம் செய்ய முயன்ற ஒருவர் அதற்குள் தவறி விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற முயன்ற பிரதேசவாசிகள் உள்ளிட்ட தொழிற்சாலை ஊழியர்கள் சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவரும் பிரதேசவாசிகள் நால்வரும் உயிரிழந்தனர். அமோனியா நச்சு வாயுவை சுவாசித்தமையாலேயே உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சுமார் 16பேர் ஹொரண வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.