யாழ். காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளை பொலிஸார் பயன்படுத்துவதனால் மக்கள் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ளனர்.

1990 ஆம் ஆண்டிலிருந்து உயர் பாதுகாப்பு வலயமாகவிருந்த காங்கேசன்துறை, 2016 ஆம் ஆண்டு முதற்கட்டமாக பகுதியளவில் விடுவிக்கப்பட்டது. அதன் பின்னர் கட்டங்கட்டமாக காங்கேசன்துறை துறைமுகம் தவிர்ந்த ஏனைய பகுதிகள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பகுதியில் மக்கள் மீள்குடியேறியுள்ள போதிலும், பொலிஸார் சில வீடுகளைப் பயன்படுத்துவதால் அங்கு மீள்குடியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொலிஸ் நிலையம், நூலகம், வாகன திருத்துமிடம், பொலிஸ் சட்டப்பிரிவு, சிற்றுண்டிச்சாலை, உணவு தயாரிப்பு ஆகிய பல்வேறு தேவைகளுக்காக இந்த வீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. 92 பேரின் காணி மற்றும் வீடுகளை பொலிஸார் பயன்படுத்தி வருவதாகவும், அவற்றினை விடுவிக்குமாறு உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெல்லிப்பளை பிரதேச செயலாளர் சண்முகராசா சிவசிறி தெரிவித்தார்.

இவ்வாறு பொலிஸாரின் பயன்பாட்டிலுள்ள காணி மற்றும் வீடுகள் தொடர்பிலான அறிக்கையை ஜனாதிபதி செயலகம் கோரியிருந்ததாகவும் அதனை அங்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொலிஸாரின் பயன்பாட்டிலுள்ள மக்களின் வீடுகளை விடுவிப்பது தொடர்பில் யாழ். மாவட்ட செயலகம் தமக்கு அறிவித்துள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் சுரேஸ் பொன்னையா தெரிவித்தார்.

இவ்வாறு பொலிஸாரின் பயன்பாட்டிலுள்ள மக்களின் வீடுகள் தொடர்பில் பிரதேச செயலகங்களிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகவும், இரண்டு வாரங்களுக்குள் அந்த அறிக்கை கிடைத்தவுடன் அது தொடர்பில் பொலிஸாருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறையில் பொதுமக்களின் 55 வீடுகள் பொலிஸாரின் வசமுள்ளதாகவும் அவற்றில் நான்கு வீடுகளுக்கு மாத்திரமே வாடகை செலுத்தப்படுவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. குறித்த 55 வீடுகளில் 28 வீடுகளுக்கு உரிமையாளர்கள் இல்லை எனபொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, பொலிஸார் தங்கும் வீடுகளில் 9 வீடுகளுக்கு வாடகை செலுத்துவதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் மேலும் 7 வீடுகளுக்கு இதுவரை எவரும் வாடகை கோரவில்லை எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. காங்கேசன்துறை சீமந்து தொழிற்சாலையின் கீழ் இரண்டு வீடுகள் காணப்படுவதாகவும், மூன்று வீடுகள் இலங்கை மின்சார சபையின் கீழ் உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, இரண்டு வீடுகளில் பொலிஸ் தொடர்பாடல் நிலையம் செயற்படுவதாகவும் ஒரு வீட்டில் வாகன பழுதுபார்க்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இவற்றுக்கான உரிய இடம் கிடைத்ததன் பின்னர் பொதுமக்களின் வீடுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டது.