இந்தியத் தலைநகர் டெல்லியில் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 8ஆவது தெற்காசியாவின் சுகநல பாதுகாப்பு மாநாட்டின்போது இலங்கையில் SACOSAN (தெற்காசியாவின் சுகநல பாதுகாப்பு மாநாட்டு அலுவலகம்) அமைப்புக்குக்கான நிரந்தர அலுவலகம் கண்டியில் அமைக்கப்படுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற 7ஆவது தெற்காசியாவின் சுகநல பாதுகாப்பு மாநாட்டின் இறுதிநாள் அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் “இஸ்லாமாபாத் நகரில் மற்றுமொரு SACOSAN மாநாடு வெற்றிகரமாக அரங்கேறியதையிட்டு நாம் பெருமைப்படுகிறோம். அடுத்ததாக டெல்லியில் நடைபெறவுள்ள எமது 8ஆவது மாநாட்டை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
அதேவேளை, அங்கத்துவ நாடுகளான நாம் நிலையான அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய எமது பயணத்தில், குறிப்பாக பாதுகாப்பான பொதுசன சுகாதார நடவடிக்கைகளை வலியுறுத்தும் அபிவிருத்தி இலக்குகள் தொடர்பில் நாம் அனைவரும் பெற்றுள்ள அனுபவங்களையும் எட்டியுள்ள சாதனைகளையும் இங்கு பகிர்ந்து கொள்ளவுள்ளோம்.
அதேவேளை, புத்தாயிரமாம் (மில்லேனியம்) ஆண்டுக்கான எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளில் சிலவற்றை இலங்கை குறிப்பிட்ட காலஎல்லைக்கு முன்பாகவே எட்டியுள்ளமை பற்றி நாம் பெருமைப்படுகிறோம். அத்துடன் எமது டெல்லி மாநாட்டின்போது எமது இலக்குகளில் நூறு சதவீதத்தை எட்டிவிட்டோம் என்ற மகிழ்ச்சிகரமான விடயத்தை பகிர்ந்துகொள்வோம் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
எமது நாட்டின் ஒதுக்கப்பட்ட சமூகங்கள் முகம்கொடுக்கும் சகல பாதிப்புகளையும் பின்னடைவுகளையும் கருத்திற்கொண்டு அவற்றை களைவதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலம் எமது இலக்குகளை எட்ட முயற்சித்து வருகிறோம்.
நாம் இஸ்லாமாபாத்தில் மற்றுமொரு பிரகடனத்தை வெளியிட்டமை எமது அனைவருக்குமே பெருமைதரும் சம்பவமாகும். எமது அங்கத்துவ நாடுகளுக்கு இடையிலான நல்லுறவின் மூலம் நாம் அனைவரும் எமது இலக்குகளை விரைவில் எட்டிவிடுவோம் என்று நம்புகிறேன். எமது அரசாங்கங்களின் இந்த எதிர்பார்ப்புக்கு இன்றைய மாநாடு ஒரு அடித்தளமாக அமைந்துள்ளது.
எமக்கான தலைமையகமொன்று எங்காவது அமைக்கப்பட வேண்டுமென எமது அரசாங்கங்கள் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகின்றன. இலங்கை அரசாங்கம் இந்த தலைமையகத்தை கண்டியில் அமைப்பதற்கு கடந்த வருடம் இணக்கம் தெரிவித்திருந்தது. 2020ஆம் ஆண்டு நாம் டெல்லியில் சந்திக்கும்போது எமது SACOSAN அமைப்புக்குக்கான நிரந்தர உறைவிடமொன்று இருக்குமென நான் எதிர்பார்கிறேன்.” எனக் குறிப்பிட்டார்.