நுவரெலியா தலவாக்கலை – லிந்துலை சமூர்த்தி வலயத்தினால், ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ், சிங்கள புத்தாண்டு வைபவத்திற்கு புத்த பகவானின் உருவப்படம் பொறித்த சேலையை அணிந்து வந்திருந்த பெண்ணை வைபவத்தில் கலந்துகொண்டவர்கள் கடுமையாக சாடியுள்ளனர்.

அக்கராபத்தனை பொலிஸ் பிரிவின் ஹோல்புறுக் பொல்மோர் தோட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் இந்த புத்தாண்டு வைபவம் நேற்று நடைபெற்றது. புத்தாண்டு வைபவத்தை ஏற்பாடு செய்திருந்த சமூர்த்தி அபிவிருத்தி அதிகாரியின் மகள் இந்த சேலையை அணிந்து வந்திருந்ததாக வைபவத்தில் கலந்து கொண்ட பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். சிகப்பு நிறமான இந்த சேலையில் மஞ்சள் நிறத்தில் புத்த பகவானின் உருவப்படங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

புத்தாண்டு வைபவத்தில் கலந்துகொண்டவர்கள், பெண் அணிந்திருந்த சேலை குறித்து அங்கு கடமையில் இருந்து பொலிஸ் அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து சமயத்திற்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஆடைகளை அணிய வேண்டாம் என பொலிஸார் பெண்ணுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

இந்த சேலை தனக்கு இந்தியாவில் இருந்து கொண்டு வந்து கொடுக்கப்பட்டது என பெண் கூறியதாக அக்கரபத்தனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆனந்தசிறி தெரிவித்துள்ளார்.