மனித உரிமை நடைமுறைகள் தொடர்பான, 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கையை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. நீதிப் பொறிமுறையை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் வரையறையுடன் செயற்பட்டதாக, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்க உதவிச் செயலாளர் John J. Sullivan இனால் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் இலங்கை தொடர்பில் 25 பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கம் அல்லது அதன் முகவர்கள் கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதாக பதிவாகியுள்ளதாக இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் துன்புறுத்தல்கள் தொடர்வதாக மனித உரிமைகள் அமைப்புக்களை மேற்கோள்காட்டி அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ், குற்றங்களுக்கு தண்டனை அனுபவித்தலும் அதில் உள்ளடங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின், மக்களுக்கு எதிரான அதிகளவான பயன்பாடு பிரச்சினையாக காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உட்கட்டமைப்பு, அதிகளவான கைதிகள் தடுத்து வைக்கப்படல் மற்றும் சுகாதார குறைபாடுகள் காரணமாக சிறைச்சாலைகளின் நிலை மோசமடைந்துள்ளதாகவும் அமெரிக்காவின் 2017ஆம் ஆண்டிற்கான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த வருடத்தில் இலங்கைக்கு 35 மில்லியன் அமெரிக்க டொலரை ஒதுக்கும் வெளிநாட்டு ஒதுக்கீட்டு சட்டமூலத்தை, அமெரிக்காவின் காங்கிரஸ் அங்கீகரித்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி, ஜனநாயக செயற்பாடுகள் மற்றும் இன, மத மோதல்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மீள் எழுச்சி ஆகியவற்றுக்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வருடம் செப்டெம்பர் மாதம் 30ஆம் திகதி வரையான நிதி ஆண்டிற்காக இந்த ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவினால் ஒதுக்கப்படும் இந்த நிதியை இலங்கை பயன்பாட்டிற்கு பெற்றுக் கொள்வதற்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

பின்வரும் மூன்று விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை, அமெரிக்க இராஜாங்க திணைக்களம் உறுதிப்படுத்தி, நிதி ஒதுக்கீட்டுக் குழுவிற்கு அறிக்கை சமர்ப்பிக்கும் பட்சத்தில் மாத்திரமே இந்த நிதியைப் பெற முடியும் என சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் மோதலுக்கான அடிப்படைக் காரணங்களை அடையாளப்படுத்தல், பொறுப்பு மற்றும் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல், நீதிக்கு மதிப்பளித்து, சிவில் மற்றும் மனித உரிமைகளை மறுசீரமைத்தல் ஆகிய மூன்று விடயங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மனிதாபிமான செயற்பாடு, அனர்த்த விடயங்களை முன்னெடுத்தல், இராணுவ மறுசீரமைப்பு மற்றும் படையினர் தொகையை குறைத்தல் உள்ளிட்ட விடயங்களுக்காக நான்கு இலட்சம் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமைதிகாக்கும் நடவடிக்கைகளின் பயிற்சி மற்றும் உபரகண விடயங்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.