சிறீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இன்று இரவு 08.00 மணியளவில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இக்கூட்டம் இடம்பெற உள்ளதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.

மத்திய செயற்குழு கூட்டத்திற்கு முன்னதாக சிறீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்திற்கு பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சிறீலங்கா சுதந்திர கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாட தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்தும் அரசாங்கத்துடன் இணைந்து செயலாற்றுவதா? இல்லையா? என்று இறுதி தீர்மானம் எடுக்கப்பட உள்ளது.

எவ்வாறாயினும் அடுத்த பாராளுமன்ற அமர்வின்போது பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த 16 பேரும் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்வது கட்டாயம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன கூறியுள்ளார்.