அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் திறந்த பிடியாணை ஒன்றை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜாலிய விக்ரமசூரியவின் பிணையாளர்களான அவரது மனைவி மற்றும் உறவினரை கைது செய்யவும் நீதிபதி பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார். சந்தேகநபரான ஜாலிய விக்ரமசூரியவை இந்நாட்டிற்கு அழைத்து வருவதற்கான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் குற்றவியல் திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. வழக்கை விசாரணை செய்த நீதிபதி மீண்டும் மே மாதம் 14 ஆம் திகதி வழக்கை மறு விசாரணை செய்யும் உத்தரவிட்டதோடு அந்த தினத்தில் பொலிஸ் குற்றவியல் திணைக்களத்தின் விசாரணை தொடர்பான அறிக்கையையும் சமர்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கான இலங்கை தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில் தூதுவர் காரியாலயத்திற்காக கட்டடம் ஒன்றை கொள்வனவு செய்த தருணத்தில் அமெரிக்க டொலர் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை முறையற்றவகையில் கையாண்டதாக அவர்மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.