யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்திலேயே மதத்தலங்களை அமைக்க முடியும் என வவுனியா பொலிஸார் மாணவர்களிடம் தெரிவித்தனர்.

வவுனியா வளாகத்தில் விகாரை அமைப்பதுக்கு சிங்கள மாணவர்கள் நேற்று முயற்சிகளை மேற்கொண்டபோது, வளாக நிர்வாகத்தினால் அம் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது. இதனையடுத்து வளாகத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் பீடாதிபதிகள் விரிவுரையாளர்களுடன் சிங்கள மாணவர்கள் முரண்பாட்டில் ஈடுபட்டிருந்தனர். இதன் காரணமாக வவுனியா வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக வளாகத்தின் முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் அறிவித்ததுடன் விடுதியில் உள்ள மாணவர்கள் அனைவரையும் விடுதியை விட்டு வெளியேறுமாறும் பணித்திருந்தார்.

இந்நிலையில் பூங்கா வீதியில் அமைந்துள்ள வளாகத்தின் நிர்வாக கட்டிடத்தொகுதியை சூழ்ந்துகொண்ட சிங்கள மாணவர்கள் உத்தியோகத்தர்களை வெளியேறவிடாமல் தடுத்திருந்தனர்.

இதனால் முதல்வர் பொலிஸாருக்கு அறிவித்து உத்தியோகத்தர்களை பாதுகாப்பாக வெளியேற ஏற்பாடு செய்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக இன்று காலையில் இருந்து நிர்வாக கட்டிடத்தொகுதி அமைந்துள்ள பகுதியை சூழ்ந்துகொண்ட சிங்கள மாணவர்கள், தாம் கொண்டு வந்த ஆலய வடிவிலான கூட்டினை தருமாறு கோரி வீதியோரத்தில் அமர்ந்திருந்தனர்.

இதன்போது வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அடங்கிய பொலிஸ் குழுவுக்கும் வளாகத்தின் முதல்வருக்குமிடையில் சுமார் 1 மணி நேரமாக சந்திப்பு இடம்பெற்றதன் பின்னர் மாணவர்களை சந்தித்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் வளாகத்தில் மத தலங்கள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடத்திலேயே வணக்கத்தலங்களை அமைக்க முடியும்.

அதற்கு பல்கலைக்கழக மேலிடத்தில் இருந்து அனுமதி கிடைக்கவேண்டும். அவ்வாறு கிடைக்கப்பெற்றால் அரை ஏக்கர் வீதம் நான்கு மதங்களுக்குமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் வணக்கத்தலங்கள் அமைக்கப்படும்.

அதுவரை எவ்வித முரண்பாடான நிலைமைக்கும் செல்லக்கூடாது என தெரிவித்ததுடன், சிங்கள மாணவர்களால் கொண்டுவரப்பட்ட புத்தரை வைப்பதற்கான கூட்டினை பொலிஸார் வளாக நிர்வாகத்திடமிருந்து தமது பொறுப்பில் பெற்றுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் மாணவர்கள் தாம் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாட்டினை செய்து தரவேண்டும் என பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக வளாக முதல்வருடன் கலந்துரையாடி அவர்களின் கருத்தின்படி செயற்படுமாறு பொலிஸார் தெரிவித்தனர்.