முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்பாக படையினரின் ஆக்கிரமிப்பில் இருக்கின்ற பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை மூன்று மாத காலத்திற்குள் விடுவிப்பதாக இராணுவம் உறுதியளித்த காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

இதனால் தாங்கள் தொடர்ந்தும் வாடகை வீடுகளில் வாழ்வதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்கு முன்பாக ஏற்கெனவே பொன்னம்பலம் ஞாபாகர்த்த வைத்தியசாலை அமைந்திருந்த பகுதியில் பொதுமக்களுக்குச்சொந்தமான காணிகளை இராணுவம் கடந்த 2009ஆம் ஆண்டிற்குப்பின்னர் கையகப்படுத்தி அவற்றைத்தொடர்ந்து ஆக்கிரமித்துள்ளனர்.இவ்வாறு இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை விடுவிக்கக்கோரி வரும் அதன் உரிமையாளர்கள் கடந்த எட்டு வருடங்களிற்கு மேலாக உறவினர்; வீடுகளிலும் வாடகை வீடுகளிலும் பெரும் துன்பங்களுக்கு மத்தியில் தாம் வாழ்வதாகவும் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரியுள்ளனர்.

682ஆவது படைப்பிரிவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மேற்படி காணிகள் விடுவிப்பது தொடர்பில் கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி படைத்தரப்பால் தமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் முதற்கட்டமாக 7.2 ஏக்கரை விடுப்பதாகவும்

மூன்று மாத கால இடைவெளிக்குள் பத்து ஏக்கர் காணியை விடுவிப்பதாகவும் ஆறு மாதகாலத்திற்குள் மூன்றாம் கட்டமாக எஞ்சியிருக்கின்ற காணிகளை விடுவிப்பதாகவும் படைத்தரப்பால் உறுதியளிக்கப்பட்டபோதும், முதற்கட்டமாக விடுவிக்கப்படடகாணி தவிர ஏனைய காணிகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என்றும் தமது காணிகளை விடுவிக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென பாதிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.