பல்கலைக்கழக பிக்கு மாணவர் சம்மேளனத்தால் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கலைப்பதற்காகவே பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக, கொம்பனித் தெருவில் இருந்து கொழும்பு நகர மண்டபம் வரையான யூனியன் பிளேஸ் வீதியின் போக்குவரத்தும் சில மணிநேரம் தடைப்பட்டிருந்தது. இதேவேளை இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப நிலையை ஏற்படுத்திய பல்கலைக்கழக மாணவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

பிக்கு மாணவர் ஒருவருடன் சேர்த்து மேலும் 09 மாணவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தின்போது குழப்ப நிலையை தோற்றுவித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் அத்துமீறி உட்பிரவேசிக்க முயற்சித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது இவ்விதமிருக்க 2016-2017ம் கல்வியாண்டிற்காக பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், பௌத்த சமயம் மற்றும் பௌத்த ஆய்வுத்துறைக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்வது இடைநிறுத்தப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.